ஈரானிய பெண் படைப்பாளிகளின் சினிமா - 3
ரதன்
சில குறிப்பிடத்தக்க பெண் இயக்குனர்களின் படங்கள்
Sentenced to Marriage
இப் படம் ஓர் இஸ்ரேலிய படம். ஆனாலும் ஒரு குறிப்பிடத்தக்க பெண்கள் ஒடுக்குமுறை பற்றிய படம்
மூன்று பெண்கள் விவாகரத்துக்காக போராடுவதை பதிவாக்கியுள்ள விவரணப்படம். ஆண்களின் அனுமதியுடனே விவாகரத்து வழங்கப்படுகின்றது. இயக்குனரின் ஒரு குறிப்பு இங்கு முக்கியமானது. (“A woman is bought in three ways and buys herself in two ways. She is bought with money, with wit and with intercourse and buys herself with divorce and with the death of the husband.”) பெண்கள் மூன்று நிலைகளில் வாங்கப்படுகின்றார்கள். 1. பணம், 2. புலன், 3. உடலுறவு. இரு வழிகளில் தன்னை தானே வாங்குகின்றாள்- விடுவிக்கின்றாள் 1. விவாகரத்து 2.கணவனின் இறப்பு.
The Ladies Room என்ற படம் பெண்களின் கழிவறையைப் பற்றிய பதிவை முன் வைத்துள்ளது. இங்கு வந்து போகும் பாத்திரங்கள். அவர்களின் வாழ்வியல் போன்றனவற்றை அக,புற சமூக கண்ணோட்டத்தில் முன் வைத்துள்ளது. இந்த கழிவறையிலேயே வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள கழிவறை மேற்பார்வையாளர். கொமெய்னியை ஆதரிக்கும், கிறிஸ்தவ கை சாத்திர நிபுணி, தனது முஸ்லீம் மருமகளை வெறுக்கின்றாள். காரணம் முஸ்லீம் மதத்தை பின்பற்றவில்லை என்பதே. முன்னாள் கணவனின் குழந்தையுடனும், மற்றொரு கைக் குழந்தையுடனும், புதிய கணவருடனும் தனது குடும்பம், கணவன் என அருகில் உள்ள பூங்காவில் வாழ்ந்து வருகின்றாள். இவர்கள் அனைவரும் சந்திக்கும் இடம் இந்தக் கழிவறை.
The Iranian Journey - கிழக்கில் இருந்து மேற்கு செல்லும் பேரூந்து ஓட்டியாக வேலை பார்க்கும் பெண் சந்திக்கும், வேலை ரீதியான பிரச்சனைகள், பயணிகள் அவரை பார்க்கும், பழகும் விதம், அவரது குடும்பமும், சமூகமும் அவரை நோக்கி எழுப்பும் எதிர்ப்புக்கள் என்பவற்றை இப்படம் பதிவாக்கியுள்ளது. இவரது கணவரும் ஒரு பேரூந்து ஓட்டியே. இவரது பெண்கள் இவரது சாதனையை பார்த்து பிரமித்த பொழுதும், சமூகமும், குடும்பமும் எதிராக உள்ளது. இவரது பணத்தையும் இக் குடும்பம் எதிர்பார்க்கின்றது. ஆண்கள் எழுதிய சட்டங்களை பெண்கள் பின்பற்ற வேண்டும் என்பது நியதி. இவ்விரு படங்களையும் இயக்கியோர் பெண்களே.
Dariush Mehrujiன் இயக்கத்தில் வெளிவந்த Leila படத்தில் லைலா என்ற பெண், கருத்தரிக்கவில்லை என்ற காரணத்தினால் மாமியாரினால் நிராகரிக்கப்படுகின்றாள். கணவனும், மனைவியும் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். இவர்களது பின்னணி நவீன யுகமானது. கணிணி, கார் என வாழ்கின்றார்கள். கணவனுக்கு பிள்ளை பிறக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. மனைவியை மிகவும் நேசிக்கின்றான். மாமியாரும், நண்பர்களும் வற்புறுத்தி கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்து கொடுக்கின்றனர். இப் படம் நவீன யுகத்தில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை பிரதிபலிக்கின்றது. இக் கருத்தைக் கொண்டு சில தமிழ் படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால் இப் படம் சமூகம் பற்றிய விமர்சனத்தை சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு பல சமயங்களில் பெண்களே காவிகளாக உள்ளனர்.
Divorce Iranian Style என்ற படம் ஈரானில் பெண்கள் அதிகமாக விவாகரத்து கேட்பதையும், அதற்கான காரணங்களையும் அலசுகின்றது. 16 வயது பெண், 38 வயது கணவன் தன்னை கொடுமைப்படுத்தினார் எனக் கூறி விவாகரத்துக் கேட்கின்றார். மற்றொரு தாய் தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி நிற்கின்றாள்.
Aroos (The Bride ) இப்படத்தில் மணமகன் ஒரு கிராம வாசியை காரினால் அடித்துக் கொன்றுவிட்டு, தப்பிவிடுகின்றான். இதை அறிந்த மணமகள் திருமணத்தை ரத்துச் செய்து விடுகின்றாள். இது போன்ற ஆண்களது அரக்கத்தனங்களுக்கு எதிரான படங்கள் பெண் படைப்பாளிகளால் பதிவாக்கப்படுகின்றன.
Cafe Setareh என்ற படத்தில் மூன்று பெண்களது வாழ்வு பதியப்பட்டுள்ளது. இவ் உணவகத்தை நடாத்தும் பெண்மணியின் கணவன் வேலையற்றவன். இவனை அவள் தனக்கு உதவி செய்ய வற்புறுத்துவதுடன், கால், கைகளை பிடித்து விடுமாறும் நிர்ப்பந்திக்கின்றாள். மற்றொரு இளம் பெண், துபாயில் தனது காதலனுடன் மத்திய தர வர்க்க வாழ்க்கை வாழ விரும்புகின்றாள். ஆனால் காதலன் ஒரு கார் மெக்கானிக். அவன் திருமணம் செய்வதற்கே பணமற்றுள்ளான். மற்றுமொரு நடுத்தர வயது பெண், இளம் வாலிபனை விரும்புகின்றாள். இவர்களது வாழ்வை கவித்துவமாக படைத்துள்ளார்கள். இப்படத்திலும் முஸ்லீம் கலாச்சார கூறுகள் விமர்சிக்கப்படுகின்றன. பெண் என்பவள் குடும்பச் சுமையாக இருக்க வேண்டும். குடும்பம் என்பதன் பிரதான கூறு தாயும், பிள்ளையுமே. இதன் நிர்வாகக் கூறே ஆண். இப் படத்தில் நேரடியாக கூறப்படுகின்றன இக்கருத்துக்கள்.
ஈரானிய நியு வேவ் பெண்ணிய படங்கள் தொடர்ச்சியாக விவாகரத்து மறுக்கப்படுவதற்கு எதிராகவும், பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்கின்றன. (Red (Fereydoun Jeyrani, 2000), Tootia (2000, Iraj Ghaderi)). In Deep Breath படத்தில் வீட்டை விட்டு வெளியேறும் இளம் பெண் இரு இளைஞர்களுடன் வாழ்வதாக காட்டப்பட்டுள்ளது. I’m Taraneh, 15 and Khakestari என்ற படத்தில் இளம் பெண்கள் காதலற்ற திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்.
The Colour of Love - Maryam Keshavarz என்ற அமெரிக்க வாழ் ஈரானிய பெண் இயக்குனரால் எடுக்கப்பட்ட விவரணத் திரைப்படத்தில், இன்றைய ஈரானில் பெண்கள் பாலியல் சுதந்திரத்தை வரவேற்கின்றார்கள். கள்ளச் சந்தையூடாக வரும் அமெரிக்க சற்றலைட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இவர்களது கருத்தியல் தளத்தில் மாற்றங்களை கொண்டுவருகின்றன. பெண்களில் பலர் விவாகரத்தை விரும்புகின்றார்கள். இஸ்லாமிய சட்டங்களையும் மீறி பல பெண்கள் செயற்படுகின்றார்கள்.
இந்த விவரணத்திரைப்படம் மிக முக்கியமானது. இன்றைய பெண்களின் சிந்தனை மாற்றங்கள் அமெரிக்கமயமாதலில்தான் மாறியுள்ளது. இது பாலியல் சுதந்திரத்தைத்தான் வளர்க்கின்றது. மாறாக உண்மையான பெண்ணிய சுதந்திரத்துக்கு எதிராக செயற்படுகின்றது என இயக்குனர் காட்சிகளுக்கூடாக வெளிப்படுத்தியுள்ளார்.
4.
பெண்கள் படைப்புக்களின் பொதுத் தன்மைகள்- கருத்துக்கள்.
1. பெண்மைக்கும், தாய்மைக்கும் உள்ள வேறுபாடுகளையும், பாதிப்புக்களையும் வெளிப்படுத்தியுள்ளன.
2. சொத்து பிள்ளைகள் உட்பட ஆண்களுக்கே உரியது.
3. சமூகம், சட்டம், குடும்பம் இவையனைத்தும் ஆண்களின் தலைமையின் கீழ்தான் செயற்படுகின்றன. இங்கு பெண்கள் அடிமைகளே.
4. சமூக ஒழுக்கங்கள் பெண்களுக்கு மாத்திரமே உரியவை.
5. விவாகரத்தும் ஆண்களுக்கு சாதகமானவையே. ஆண்களே தீர்மானிப்பாளர்களாக உள்ளார்கள். நீதிபதியும் ஆண், கணவனும் ஆண்..
6. பெண்கள் தங்களது சமூக வாழ்வியலிலும், தொழில்சார் வேலைத்தளங்களிலும், வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, தாயாக, சகோதரியாக, மனைவியாக, பிள்ளையாக செயற்படும்பொழுது, அவர்களது செயற்பாடுகளையும், சிந்தனைகளையும் தீர்மானிப்பவர்களாக ஆண்களே உள்ளனர். ஈரானில் நடைபெற்ற சமூக மாற்றம் என்பது பெண்களுக்கு எதிரானதே. இஸ்லாமிய சட்டம் கி.பி 700 ம் ஆண்டிலேயே பெண்களுக்கு வாக்குரிமை, கருவைக் கலைக்கும் (4 மாதங்களுக்கு உட்பட்டது) உரிமை போன்றனவற்றை வழங்கியிருந்தது. தலிபானும், முஸ்லீம் மதவாதிகளும் பெண்கள் பாடசாலைக்கு செல்வதையும் தடை செய்துள்ளார்கள்.
7. பாத்திரங்களுக்கடையிலான சமனற்றதன்மையினூடாக பெண்கள் மீதான அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றார்.
8. இவரது படங்களில் பெண்கள் புத்திஜீவிகளாகவும், படித்தவர்களாகவும், செயற் திறன் மிக்கவர்களாகவும் காட்டப்படுகின்றனர்.
9. இவர்கள் சமூகப் போராளியாகவும் செயற்படுகின்றனர். இவர்களது படங்களில் வரும் பெண் பாத்திரங்கள் ஆண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு தம்மாலான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
10. ஆண் பாத்திரங்கள்; குற்ற உணர்வில்லாமல், ஒரு வித பெருமிதம் கொண்ட தன்மை காணப்படுகின்றது. இது ஒரு மனநோய் என்பது இவர்களது வாதம்.
11. பெண்கள் கல்வி, பொருளாதார மேம்பாடு அவசியம் என்பதனை வலியுறுத்துகின்றார்
12. குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகள் கல்வியில் பெரிதும் அக்கறை காட்டுகின்றனர்.
5.
அண்மைக் காலங்களில் கொலிவூட் படங்களின் தாக்கத்தாலும், கறுப்புச் சந்தை சற்றலைட் தொலைக்காட்சியாலும் சில புதிய படங்கள், கொலிவூட் படங்கள் பெண்களை சித்தரிக்கும் பாணியில் வெளிவருகின்றன. மிக அண்மையில் வெளிவந்த Behrouz Afkhami's Shokaran (Hemlock) என்ற படம் 1980 களில் வெளிவந்த கொலிவூட் படமான Fatal Attraction என்ற படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப் படத்தில் சிமா என்ற பெண் பாத்திரம், ஒரு தொடர் சிகரட் புகைப்பாளராகவும், போதை மருந்து உட்கொள்பவராகவும், ஆண்களை மயக்குபவராகவும் காட்டப்பட்டுள்ளது. இப் படத்திற்கு எதிராக அரசாங்கம் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. மாறாக இப் பாத்திரம் ஓர் தாதி என்பதனால் தாதிகள் சங்கம் மாத்திரம் தங்களது தொழில் தார்மீகத்துக்கு எதிரானது என எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
6.
ஈரானிய பெண் இயக்குனர்கள் உலகின் மற்றைய பெண் இயக்குனர்களை விட வித்தியாசமானவர்கள். ஈரானிய படங்களில் காதல், அன்பு போன்ற உணர்ச்சிகளை வெளிப்படையாக காட்டமுடியாது. இஸ்லாமிய கோட்பாட்டியலை மதத்தை பின்பற்றும் இந்த படைப்பாளிகள், மதத்தின் பெயரால் கட்டப்பட்ட கலாச்சாரத்தின் மீதான விமர்சனத்தையே முன்வைக்கின்றார்கள். யதார்த்தக் காட்சிகள் மூலம், சட்டத்தையும், சமூகத்தையும் விமர்சிக்கின்றார்கள். இந்த யதார்த்தக் காட்சிகள் பெண்கள் மத்தியில் சுதந்திர உணர்வை தூண்டும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உணர்வானது ஒரு குற்ற உணர்வற்று அமையவேண்டும் என்பதில் கவனம் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
மரபு சினிமா முறைகளை உடைத்தெறிந்துவிட்டு, புதிய வடிவமொன்றுக்குள் செல்லும் இவர்கள், மரபு அறிவு ஜீவிகள், மரபு அரசியல்- மதவாதிகள் மீது குற்ற உணர்வை சுமக்க வைக்கின்றார்கள். மனித, கலாச்சார உறவுகளுக்கான சமூக நிர்ணய காரணங்களை விசாரணைக்குட்படுத்துகின்றனர். இதுவே இவர்களது மிகச் சிறந்த தன்மையாகவும் காணப்படுகின்றது. ஆண் பெண் எதிர் முரண் நிலைகளின் தன்மைகளை ஆய்வு செய்வதுடன், ஆண்களின் அசைக்க முடியாத நம்பிக்கைகளையும் உடைத்தெறிகின்றார்கள். பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ள கலாச்சார குற்ற உணர்வு, சிதைக்கப்பட்டுள்ள தைரியத்தின் காரணகர்த்தாவான ஆண் மீதான விமர்சனங்களை வெளிப்படுத்துகின்றனர்.
பெண் பாத்திரங்களை அனுதாப நோக்குடன் படைக்காமல், அதிகாரப் பகிர்வுக்கு கோரிக்கை விடுகின்றார்கள். ஆண்களின் அதிகார மையத்தை தகர்ப்பதற்கும், சமூக நிறுவனங்களின், அரசின் பிற்போக்குத் தன்மையயை உடைப்பதற்கும் பெண்களை தயார்படுத்துகின்றார்கள். தங்களது எல்லைக்குள் நின்று தங்களது எதிர்ப்புக்களை காட்டுகின்றார்கள்.
இவர்களது படங்கள் எவையும் பெண்களை மோசமாக சித்தரிக்கவில்லை மாறாக அவர்களது துணிச்சல்களையும், இயங்குதிறனையும், எதிர்ப்புக்களையும் பதிவு செய்துள்ளன. இவர்கள் தங்களை பெண்ணியவாதி இயக்குனர்களாக கூறவில்லை. மாறாக சமூக அக்கறை கொண்ட இயக்குனர்கள். ஆனால் பாலால் பெண். இவர்களவிற்கு வேறு எந்த இயக்குனர்களும் செல்லவில்லை. இந்திய வம்சாவளி பெண் இயக்குனர்களில் அபர்ணா சென் ஒருவரையே ஒரளவிற்கு கூறலாம். இவர்கள் இயங்கும் தளம் ஒரு சீரிய பெண் விடுதலையை நோக்கிச் செல்வதை இவர்களது படைப்புக்கள் வெளிப்படுத்துகின்றன.
கட்டுரைத் தொடர் நிறைவடைந்தது.